சிவபுரம் சோழர் கல்வெட்டுகள்

கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் 1921 ஆம் ஆண்டு 11 தமிழ் கல்வெட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை யவற்றின் கல்வெட்டு பாடமும் இன்றளவும் வெளியிடபடவில்லை. சரி அந்த கோயிலில் அக்கல்வெட்டுகள் இருக்கிறதா என்று பார்த்தால் கண்ணே கண்ணே னு ஒரே ஒரு தூண் கல்வெட்டு மட்டுமே இப்போ இருக்கு. அந்த தூணும் இப்போ கிணறு அருகே உள்ளது. கோயிலில் இருந்த கற்கள் எல்லாமே நீக்கப்பட்டு புதிய கற்கள் வைத்து கட்டப்பட்டுவிட்டன. அதனால் தான் இப்போ எந்த கல்வெட்டும் இல்லை. இக்கோயிலில் தான் எனது கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நடைபெற்று வருவதால் எனக்கும் இந்த இடம் கடந்த ஓராண்டாக பழகிவிட்டது.

1921 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில் இராசேந்திர சோழரின் ஓர் தூண் கல்வெட்டு அம்மன் சன்னதியில் இருப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் இப்போது அம்மன் சன்னதியும் புதுமையாக உள்ளது. எனக்கு தெரிந்து அந்த தூண் தான் இக்கோயிலில் கிணறு அருகே தற்போது வைக்கப்பட்டுள்ள தூணாக இருக்கும்.

எழுத்தமைப்பும் இராசேந்திர சோழரின் காலகட்டத்தை ஒத்தே உள்ளது. மேலும் இத்தூண் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் முழுகையாக எந்த தகவலையும் படிக்க முடியவில்லை. தூணின் அடிப்பகுகியும் பாதி சிமெண்டால் மறைந்துவிட்டது. தூணின் அடியில் தான் எழுத்துக்கள் ஓரளவு தெளிவாக உள்ளது. மாவு போட்டு படித்ததில் ஒரு இடத்தில், ” ஸ்ரீ ரா(ஜெ ) ” என்றும் அதற்கு அடுத்த வரியில் ” சோழ தேவ ” என்றும் வருவதை வைத்தும் பார்க்கும் போது இக்கல்வெட்டு 1921 ஆம் ஆண்டு ஆண்டறிக்கை சொல்லும் அம்மன் சன்னதியில் இருந்த தூண் கல்வெட்டாக இருக்கும் என்பது எனது ஊகம்.

இப்போது இக்கோயில் மூலவர் சிவகுருநாதர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் பண்டைய காலத்தில் சிவபுரமுடையார் என்றழைக்கப்பட்டுள்ளார்!

மேலும் இக்கோயில் பாடல் பெற்ற தலமாகும், கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளாக இக்கோயில் உள்ளது. மேலும் இவ்வூரின் பெயரும் சிவபுரம் என்றே இன்றளவும் உள்ளது..!

நன்றி
வேல்கடம்பன்
உலகளாவிய இளந்தமிழர் குழு

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment